சூரியனின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் நேற்றைய காற்று முக்கியமானது. இந்த நிகழ்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கின்றேன். வெறுமனே ஒலிவாங்கியை ஒயிர்ப்பித்து “ஹலோ யார் பேசுறீங்க, சாப்பிட்டீங்களா, என்ன பாட்டு வேணும்” என்று கேட்டு, இடையில் தேவையோ இல்லையோ கொஞ்சம் சிரித்து வைப்பதோடு நிறைவு பெறும் நிகழ்ச்சியல்ல இது! பாடல்களுக்கிடையில் இலக்கியம் பற்றியும், பாடல்களிலுள்ள இலக்கியம் பற்றியும் பேசிப் பேசி வளர்த்த நிகழ்ச்சி!
நேற்றைய காற்று – இதயங்களின் ஆறுதலாக இருந்தது.
அதனால்தான் ‘சங்கீதத்தில் ஒரு சாய்வு நாற்காலி’ என்று, அந்த நிகழ்ச்சியை அடைமொழி கொண்டு அழைத்தேன்!
ஒரு காலத்தில் – இடைக்காலப் பாடல்களும் அந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான கவிதைகளுமாக மட்டும் நேற்றைய காற்று – தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது. சிலவேளைகளில், வாலியின் பாடல்களுக்கு வைரமுத்துவின் கவிதைகள் என்றும், வைரமுத்துவின் பாடல்களுக்கு மேத்தாவின் கவிதைகள் என்றும் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை தெரியாத்தனமாக ரணகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் – இடைக்காலப் பாடல்களும் அந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான கவிதைகளுமாக மட்டும் நேற்றைய காற்று – தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது. சிலவேளைகளில், வாலியின் பாடல்களுக்கு வைரமுத்துவின் கவிதைகள் என்றும், வைரமுத்துவின் பாடல்களுக்கு மேத்தாவின் கவிதைகள் என்றும் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை தெரியாத்தனமாக ரணகளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த நேற்றைய காற்றை – வேறு திசைக்குத் திருப்பியோர் வெள்ளையனும் நானும்தான்!
ஏனைய தமிழ் வானொலிகள் – நேற்றைய காற்று நிகழ்சியின் போது, என்ன செய்கின்றன என்று கவலைப்படாமல் எங்கள் திசையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.
ஆனாலும், சூரியன் தடைசெய்யப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்த போது – நேற்றைய காற்று நிகழ்ச்சியை எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்துத் தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்தது. காரணம், சூரியன் இல்லாத இடைவெளியில் – சில வானொலிகள் நேற்றைய காற்று நேரத்தில் இடம்பெறும் தமது நிகழ்ச்சிகளில் சில புதிய மாற்றங்களைச் செய்திருந்தன. அதில் குறிப்பிடத்தக்கது, சக்கி எப்.எம்.மில் இடம்பெற்ற ‘மாயாவின் ஓட்டோகிராப்’ எனும் நிகழ்ச்சி!
உண்மையாகச் சொன்னால், இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக நேற்றைய காற்றில் ஏதாவது புதிய விடயமொன்றை ஆரம்பித்தேயாக வேண்டுமென்று – கிட்டத்தட்ட சூரியனின் அத்தனை அறிவிப்பாளர்களும் அபிப்பிராயப்பட்டார்கள். நேற்றைய காற்றில் புதிதாக எதையாவது சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நானும் நம்பினேன்! இந்த அவாவுதல்களினால் உருவானதுதான் நேற்றைய காற்றில் இடம்பெற்ற ‘இறவாத காலம்’ என்கின்ற அம்சம்!
‘இது என்னோட டயறிக் குறிப்பு’ என்கின்ற ஆலாபனையோடு ஆரம்பமான இறவாத காலம், மிகக் குறுகிய காலத்திலேயே நேயர்களினதும், எங்கள் அறிவிப்பாளர்களினதும் அபிமான நிகழ்ச்சியாக மாறியது. இதற்கான பிரதிகளை எழுதுவதற்கும், தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்கும் நான் மிகக் கடுமையாக உழைத்தேன். காதலைப் பற்றி மட்டுமே பேசும் அம்சமாக இறவாத காலத்தை நான் வரையறுத்து வைத்திருந்தேன். ஆனாலும், காதல் எனும் புள்ளியில் நின்று கொண்டே ஏராளமான விடயங்களைத் தொடுவதற்கும் முயற்சித்தேன்!
ஒரு நாள் நேற்றைய காற்றில் ‘இறவாத காலம்’ இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, கலையகத்துக்கு வந்த நேயரொருவரின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தேன். பேசியவர் ஓர் இளைஞர். மிக நாகரீகமாகப் பேசினார். அவர் மிகப் பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் இருப்பவர். காதலின் துயரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அன்றைய ‘இறவாத காலம்’ தன்னை மிகவும் பாதித்து விட்டதாகச் சொன்னார். தனது கடந்த கால நினைவுகளை அந்த நிகழ்ச்சி கிளறிவிட்டதாகக் கூறினார். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அவர் – ஒரு கட்டத்தில் அழுது விட்டார். நான் உறைந்து போனேன்!
அந்த அழுகையை எப்படி வகைப்படுத்துவது என்று – இதுவரை எனக்குப் புரியவேயில்லை! அந்த அழுகைதான் எனது நிகழ்ச்சியின் வெற்றியா? ஒரு வானொலி தனது நேயருக்கு சந்தோசங்களையல்லவா கொடுக்க வேண்டும்? ஆனால், எனது நிகழ்ச்சினூடாக நான் சோகங்களையல்லவா சிருஷ்டித்துக் கொடுத்துள்ளேன்.
உண்மையாகச் சொன்னால், நேற்றைய காற்று போன்ற இரவு நேர நிகழ்ச்சியில் சோகப்பாடல்களை ஒலிபரப்புவதில் எனக்கு உடன்பாடே கிடையாது. துயரமான மனநிலையில், ஆறுதலுக்காக நமது வானொலியைக் கேட்கும் ஒரு நேயருக்கு, நாம் சோகப்பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தால், நிலை என்ன?
இரவில் காதல் ரசம் சொட்டும் சந்தோசமான பாடல்களை ஒலிபரப்புங்கள் என்று – எனது நிர்வாக இயக்குனர் ரேய்னோ சில்வா அடிக்கடி கூறுவார். காரணம், ஆயிரம் மன உளைச்சல்களுடனும், சோர்வுகளுடனும் வானொலியைக் கேட்கும் நேயர்களை, நாம் அந்தக் கணங்களிலாவது சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். நேயர்களின் கவலைகளை நமது நிகழ்ச்சியால் மறக்கடிக்க வேண்டும். குறிப்பாக – இரவு என்பது அமைதியும், தனிமையும் நிறைந்தது என்பதால் வானொலி நிகழ்ச்சிகள் – நேயர்களை எளிதாகவும், ஆழமாகவும் சென்றடைகின்றது.
ஆனால், நமது கருத்து நிலைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு பலவேளைகளில் நாம் – வானொலியில் இயங்க வேண்டியிருக்கிறது. அதனால்தான், நேற்றைய காற்றில் சோகங்களையும், சோகப்பாடல்களையும் சேர்க்க வேண்டியிருந்தது!
இது – இரவாத காலம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு பிரதி. வாசித்துப் பாருங்கள்!
நான் காதலால் கொல்லப்பட்டுக் கிடப்பதாக – நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்!
அந்த மரணம் தற்செயலானதா? அல்லது திட்டமிடப்பட்டதா? என்பது பற்றி – இப்போது ஞாபகமில்லை. ஆனால், ஒரு கொலையை நிகழ்த்திய பரபரப்பேயின்றி காதல்
என் உடலருகே நின்றது.
என் உடலருகே நின்றது.
என் உடலுக்கருகில் நீயும் நின்றாய், ஆனால் என் உடலைக் காட்டி அது நானில்லை என்றாய். கனவைக் கண்டு கொண்டிருந்த நான் பதறிப்போனேன். உன்னை உருகி உருகி காதலித்த என்னை, நான் இல்லை என்று நீ சொன்னதால் – நான் அதிர்ந்து போனேன்.
நீ நேசித்தது எனது ஆத்மாவை என்றாய். ஆத்மா என்பது வெற்று உடலல்ல என்றாய். என்னை கொலை செய்த காதல் – அனைத்தையும் கேட்டு நின்றது.
அப்படியென்றால் உடல் என்பது நானில்லையா? ஆத்மா என்பது என்னிலிருக்கும் வேறொன்றா? அல்லது ஆத்மாதான் நானா? சிலவேளை, உடலென்பதுதான் நான் என்று எண்ணிக்கொண்டிருப்பது எனது மூட நம்பிக்கையா?
நீ எனது பெயரைச் சொல்லி அழைத்தாய் – வேறேதோ திசையைப் பார்த்து! அந்தக் கணத்தில் எனது உடல் உன்னை ஏக்கத்துடன் பார்த்ததை நீ கவனிக்கவேயில்லை!
கூடியிருந்தவர்கள் – நிகழ்ந்தது ஒரு விபத்தென்று கூறி, காதலை மன்னித்தார்கள்!
காதல் இன்னுமொரு கொலையை நிகழ்த்தும் தீர்மானத்தோடு அங்கிருந்து மிதந்து சென்றது!
நீ என் ஆத்மாவை அழைத்துக் கொண்டேயிருந்தாய்.
எனது உடல் தனித்துக் கிடந்தது.
அதில் குந்த வந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தது விதியின் கரம்
No comments:
Post a Comment