
காதலைப் பற்றி அதிகம் எழுதக்கூடாது என்பது எனது பேனா எனக்கு போட்டு வைத்திருக்கும் ஒரு கண்டிப்பான கட்டளை. அதை மீறியும் பல தடவைகள் எழுத எத்தனிக்கும் பொழுது எனது விரல்கள் கூட அந்த கட்டளையை ஞாபகப் படுத்தும். என்ன செய்வது? நான் அதிகம் இளைஞர்களை நேசிப்பவன். ஆக, இந்த காதல் அவர்களின் ஒரு முக்கியமான அம்சம். அப்படியிருக்க எப்படி அதை நான் முற்று முழுதாக ஒதுக்கி வைப்பது என்பது எனது மனம் பேதலிக்கும் ஒரு விடயம். இருந்தும் அந்த கட்டளையில் அதிகம் கண்டிப்பாக இருந்த எனது மனம் இன்று எனது நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பின் கண்டதும் காதலைப் பற்றி எழுதி விடவேண்டும் என்று எனது மனம் அடம்பிடித்ததை என்னால் மறுக்க முடியவில்லை. ஆகவே மீண்டும் ஒரு காதல் பதிவு. இந்த பதிவை நான் இடுவதற்கு முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் இப்படியும் நாகரீகமற்ற காதல்களும் நரம்பற்ற காதலிகளும் நமது சமூதாயத்தில் நடமாடுகிறார்கள் என்கின்ற ஒரு ஆச்சரியமூட்டும் செய்தியை நம் இளைஞர்களுக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கும் ஒரு அனுபவமேயாகும்.
இவன் எனது நீண்டகால காரியாலய நண்பன். ஒன்றாக மன்னாரில் நாங்கள் வேலை செய்த தருணங்களை என்றுமே என்னால் மறந்து விட முடியாது. அப்பொழுது அவனிடம் இருந்தவை ஒரு அப்பாவி சிரிப்பும், ஆனந்தப்பேச்சும், அவனை முற்றுமுழுதாக கட்டிப்போட்டிருந்த அவன் காதலும். அவளும் இவனை அப்படியே காதலித்தாள். இருந்தும் அவள் சரியில்லை என்பதை அவனது சகல நண்பர்களும் அவனுக்கு வேண்டிய அளவு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பித்த காதலை எப்படி நிறுத்துவது. காதல் அனைத்தையும் மறைத்துவிடும் குருட்டு மந்திரம் என்பது இவனுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா? ஓகோ என காதல் ஓடியது நான்கு வருடங்கள். இவன் உழைப்பில் வாழ்பவள் அந்த காதலி. வீட்டில் இவன் அம்மா அப்பாவும் இவன் உழைத்த பணத்தை பார்த்தது மிக அரிது. அவள் கொறிக்கும் கடலையில் இருந்து அவள் போடும் உள்ளாடை வரை இவன் பணமே. ஆக, இவன் காதலன் அல்ல. அவள் சட்டரீதியற்ற கணவன். என்ன ஒரே ஒரு குறை அவளிடம் தாலி இல்லை. இந்தளவிற்கு அவர்கள் காதல் ஆகா ஓகோ என்று ஓடிய காலம் அந்த நான்கு ஆண்டுகள்.
இவன் நினைத்தது இவளை கொழும்பு வரை கொண்டுவந்து பெரிய படிப்பு எல்லாம் படிப்பிக்க வேண்டும் என்பது. அதன்படி அவளை, அதுதான் மனைவி போன்ற காதலியை கொழும்பு வரை கொண்டுவந்து சகல செலவுகளையும் பொறுப்பேற்று (அவள் கிட் கார்ட் உட்பட இவள் அனைத்தும் இவன் செலவுகளே..) காதலியை நன்றாக படிப்பிக்க வைத்து நல்ல காதலன் என்கின்ற பெயர் பெற ஆசைப்பட்டவன் இவன். காலங்கள் கடந்தன. மன்னிக்கவும் ஓடின. இவள் கொழும்பில். அவன் பொறுப்பில். ஒரு நாள், மாலை நான்கு மணி. அவளை வெள்ளவத்தை கடலோரம் ஊடாக வீடு வரை கூட்டிச் சென்று இராவுணவு உட்பட சகல செலவுகளையும் பார்த்து, எடுத்து அவளை அவள் தங்கியிருந்த வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு இவன் கிளம்ப தயாரானான்.
'டார்லிங், செலவுக்கு காசு இல்லை..' கையை பிடித்தவாறு கூறினாள் அவள். அதுதான் பாக்கெட் மணி கேக்குறாள் மக்கள்ஸ். அதுக்கு நம்ம ஆளு
' ஓ.. எவ்வளவு வேணும் டார்லிங்?'
'ஒரு 2000 போதும்'
'சரி இந்தா...'
என ஒரு புது 2000 ரூபாய் தாளை வெகு வேகமாய் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டிய நண்பன் 'குட் நயிட்' சொல்லி தனது வீடு நோக்கி புறப்பட்டான்.
இரவு 8 மணி. வீடில் இருந்த காதலன் ஒரு முறை அவளை தொலைபேசியில் அழைத்துப் பார்ப்போம் என எண்ணி, அவள் இலக்கத்தை அழுத்தி காதில் வைத்தபோது இவன் காதில் கேட்டது 'நீங்கள் அழைக்கும் இலக்கத்தை அடைய முடியவில்லை..' சரி தொலைபேசி ஆப் இல் இருக்கிறது என எண்ணியவன் கொஞ்சம் நேர இடைவெளி கொடுத்து மீண்டும் 9 மணிக்கு அழைத்த பொழுதும் அதே பதிலையே அவனால் கேட்க முடிந்தது. அவ்வாறே முறையாக 10, 11, 12, 1, 2, 3, 4, என இரவிரவாக தன் காதலியை தொலைபேசியில் அழைக்க முயன்றவனுக்கு கிடைத்த பதில் 'நீங்கள் அழைக்கும் இலக்கத்தை அடைய முடியவில்லை' என்பதே. இரவிரவாக தொலைபேசியில் தேடிய காதலன் மறுநாள் காலையில் அவள் வீட்டிற்கு தொலைபேசி செய்தபொழுது அந்த வீட்டு அம்மா சொன்ன பதில்,
"தம்பி, அவ நேற்று இரவு ஏழு மணிக்கு கடைக்கு போய்டு வாரன் எண்டு போனவ இன்னும் வீட்ட வரல.."
அதிர்ச்சியில் உறைந்த நமது காதலன், அடுத்து தொலைபேசி செய்தது அவளது உற்ற நண்பி ஒருத்திக்கு..
"நான் ரவி பேசுறன், ரீமா எங்க எண்டு தெரியுமா??"
"ஓ, ரவி அண்ணாவா?, அண்ணா நான் சொல்லுறத எண்ணி கவலை படாதீங்க.. நீங்க அவள ஒரு பெர்சனல் கிளாசுக்கு கொண்டுபோய் விட்டீங்களே.. அந்த மாஸ்டர அவ விரும்பி அவரோட நேற்று ஓடி போய்டா.."
"வாட்...????"
"ஆம் அண்ணா, ஒவ்வொரு நாளும் இரவு உங்களோட கதைச்சிட்டு பதினோரு மணில இருந்து காலம ரெண்டு மூணு மணி வரைக்கும் அந்த மாஸ்டரோட போன் கதைப்பா.., அதோட அவட ரெண்டு போனும் மூணு சிம் கார்டும் இருந்திச்சு.. தெரியுமா?.. அந்த மாஸ்டரோட நெடுக வெளில எல்லாம் போவா.. நீங்க ஏன் அண்ணா இப்பிடி அவட ஏமாந்தீங்க??"
சுக்கு நூறாய் உடைந்தவன், இவன் பொறுப்பில் அவளை கொழும்பில் கொண்டுவந்து விட்டதன் காரணமாக இவன் வெள்ளவத்தை காவல் துறையில் சென்று இவளை காணவில்லை என்கின்ற ஒரு முறைப்பாட்டையும் செய்தான். காவல் துறை அவர்களை கண்டுபிடித்து இந்த காதலன் முன்னும் அவள் பெற்றோர்கள் முன்னும் நிறுத்தியபோது தனது புது கணவன் அருகில் குழைந்தபடி நின்றவள் காவல் துறையினருக்கு கொடுத்த இறுதி பதில்,
"இவர நான் லவ் பண்ணினது உண்மை.. ஆனால் இவர் எனக்கு காசு மட்டும் தான் கொடுத்தார்.. அன்பு பாசம் இவைகளை கொடுக்க வில்லை.. அதுதான்.."
"..................."
இந்த கதையை எனது நண்பன் என்னிடம் கூறி முடிக்கும் வரை அமைதியாக இருந்த எனது நா, இறுதியில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை, ஆங்கிலத்தில் எப் (F) இல் தொடங்கி கே (K) யில் முடிந்தது.
ஆண்களே இந்த நவீன காதலிகள் மட்டில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏமாறக் கூடிய சந்தர்ப்பம் இப்பொழுதெல்லாம் மிக மிக அதிகம்.
பி.கு. இந்த கதை உண்மை சம்பவம் எனினும் இதில் பாவிக்கப்பட்ட பெயர்கள் உண்மையானவை அல்ல.
No comments:
Post a Comment